கிளிநொச்சி கரைச்சிப்பகுதியில் பொருத்தப்பட்ட வீதி மின் விளக்குகள் பல செயலிழப்பு

கிளிநொச்சி – கரைச்சிப்பிரதேச சபையினால் பல இலட்சம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்ட வீதி விளக்குகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீதி மின் விளக்குகள் செயலிழந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஓரிரு மாதங்களிலே செயலிழந்துள்ளமை தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் கரைச்சி பிரதேச சபையிடம் முன்வைத்தபோதும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபைக்குட்பட்ட பெரிய பரந்தன் வட்டாரத்தில் சுமார் 13 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்ட 105 வீதி மின்விளக்குகளில் 19 வரையான மின்விளக்குகள் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன.

முரசுமோட்டை வட்டாரத்தில் நான்கு இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்ட 33 மின்விளக்குகளில் 8 மின்விளக்குகள் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன.

கண்டாவளை வட்டாரத்தில் 12 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்ட 97 மின்விளக்குகளில் 21 விளக்குகள் பழுதடைந்துள்ளன.

புன்னைநீராவி வட்டாரத்தில் நான்கு இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்ட 35 வீதி விளக்குகளில் 07 வி ளக்குகள் பழுதடைந்தநிலையில் காணப்படுகின்றன.

பிரமந்தனாறு வட்டாரத்தில் எட்டு இலட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்ட 65 மின்விளக்குகளில் 13 வரையான விளக்குகளும், கல்மடுநகர் வட்டாரத்தில் 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்ட 66 மின் விளக்குகளில் 5 மின்விளக்குகளும், இராமநாதபரம் வட்டாரத்தில் ஏழு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்ட 58 வீதி மின்விளக்குகளில் 4 விளக்குகளும், திநகர் வாட்டாரத்தில் பொருத்தப்பட்ட 96 விளக்குகளில் 37 வரையான விளக்குகளும் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன.

இதேபோன்று மருதநகர் வட்டாரம், கிளிநொச்சி நகர வட்டாரம், கணேசபுரம் வட்டாரம், உருத்திரபுரம் வட்டாரம், அக்கராயன் வட்டாரம், வன்னேரிக்குளம் வட்டாரம், கோணாவில் வட்டாரம், செல்வாநகர் வட்டாரம், உதயநகர் வட்டாரம், கிருஸ்புரம் வட்டாரம், பாரதிபுரம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம் வாட்டாரம் என 21 வட்டாரங்களிலும் கோடிக்கணக்கான நிதியினை செலவிட்டு பொருத்தப்பட்ட வீதி மின்விளக்குகளிலும் சுமார் நூறுக்கும் மேற்பட்ட மின்விளக்குகள் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன.

அதாவது வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஒருவாரகாலத்தில் கூட பழுதடைந்த விளக்குகள் கூட இவற்றில் அடங்கியுள்ளன என்றும் மக்களுக்கான அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டஇது போன்ற அபிவிருத்திகளில் அதிக மக்கள் பயன்பாடின்றியும் மக்களுக்கு பயன்பாத வகையிலும் காணப்படுவதாகவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரியுள்ளனர்.