கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு!

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள முரசுமோட்டை ஐயன் கோயிலடிப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் ஒன்றை கண்டாவளை பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர் கைப்பற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முரசுமோட்டை ஐயன் கோவிலடிப்பகுதியில் இன்று மணல் ஏற்றிக்கொண்டிருந்த டிப்பர் வாகனத்தை கண்டாவளை பிரதேச செயலாளர் ரீ.பிருந்தாகரன் மற்றும் கிராம அலுவலகர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பகுதியில் மண் ஏற்றுவதற்கான எந்த அனுமதிப்பத்திரங்களும் இதுவரை வழங்கப்படவில்லை என்பதை பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கும், பொலிஸாருக்கும் தொடர்புகள் இருப்பதாக பல்வேறு தரப்புகளும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.