இரணைமடு சட்டவிரோத மண்ணகழ்வு நடவடிக்கைக்கு முற்றுப்பள்ளி எப்போது?

இரணைமடு சட்டவிரோத மண்ணகழ்வு நடவடிக்கைக்கு முற்றுப்பள்ளி எப்போது?

தனிப்பட்ட சிலரின் சுகபோக வாழ்க்கைக்காக நாட்டின் இயற்கை வளங்கள், அனைத்து வழிகளிலும் சூறையாடப்படுகின்றன.

நாடு இதுவரை கண்டிராத வகையில் நிலம், நீர், காற்று என அனைத்து இயற்கை வளங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இயற்கை மீதான மனிதனின் கொ டூர தா க்கு தல் மற்றும் இரக்கமற்ற சுயநலம் மிக்க செயற்பாடுகள் மட்டுமே இவை அனைத்திற்கும் காரணம். ஆனால், இதன் விளைவுகளையும் மனிதர்களே அனுபவிக்க வேண்டியுள்ளது.

இவ்வாறானதொரு இயற்கை மீதான மனிதனின் கொடூர தாக்குதல்தான் கிளிநொச்சி, இரணைமடு பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண்ணகழ்வு நடவடிக்கை.

இதன் காரணமாக, குறித்த பகுதி மக்களின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

இரணைமடு குளத்தின் அணைக்கட்டின் அரை கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து ஆறு கிலோ மீற்றர் வரையான பகுதியின் ஆறு மற்றும் ஆற்றுப் படுக்கை ஆகிய பகுதிகளில் சுமார் 80 ஆண்டுகளுக்கும் அதிகமாக பாதுகாக்கப்பட்டு வந்த மணல் வளம் சட்ட விரோதமாக அகழப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக கிளிநொச்சி பகுதியை அண்மித்துள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் இல்லாது போயுள்ளதனால் குடிநீர் பிரச்சினைக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இரணைமடு விவசாய சம்மேளனம் மற்றும் பொது மக்கள் இணைந்து கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் கடந்த வாரம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதிலும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லையென மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளை, இரணைமடு பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண்ணகழ்வை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் அறிந்து கொள்வதற்காக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனை கெப்பிடல் நியூஸ் தொடர்பு கொண்டு வினவியது.

இதற்கமைய, மண்ணகழ்வு நடவடிக்கையினை கட்டுப்படுத்துவதற்கு இராணுவம், பொலிஸ் மற்றும் சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடி வருவதாக அவர் தெரிவித்தார்.

செய்தி மூலம் – கெப்பிடல் நியூஸ்