கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தியில் கவனம் செலுத்தும் டக்ளஸ் : மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் வாக்குறுதி

கிளிநொச்சி மாவட்டத்தில் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் 3வருடங்களிற்குள் நிறைவுபடுத்தப்படுவதுடன் இந்திய இழுவைப்படகு அச்சுறுத்தல் தொடர்பில் விரைவில் தீர்வு எட்டப்படும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ள்ஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலில் ஒன்று இன்றைய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறுகூறியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி, இரணைதீவு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் இந்திய இழுவைப்படகுகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், இந்த அரசின் காலத்தில் மீண்டும் இவ்வாறான பிரச்சினை எழுந்துள்ளதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் குறித்த விடயம் தொடர்பில் இதுவரை எனக்கு யாரும் தெரிவிக்கவில்லை. இவ்விடயம் தொடர்பில் எனக்குத்தெரியாது. ஆனாலும் இந்திய இழுவைப்படகு பிரச்சினை என்பது இரணைதீவிற்கு மாத்திரமல்ல வடக்கு மாகாணத்திற்கே பெரும் சவாலாக காணப்படுகின்றது.

இந்த நிலையில் இந்திய அரசுடன் தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்றோம். வடக்கில் அச்சுறுத்தலாக காணப்படும் இந்திய இழுவைப்படகினை எல்லை பகுதிக்குள் அனுமதிக்காதவாறு தடுப்பதற்கான உறுதிப்பாட்டினை அரசாங்கம் வழங்கியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் விரைவில் இரணைதீவு பகுதிக்கு செல்வோம். அப்போது குறித்த விடயம் தொடர்பில் விரிவாக கவனம் செலுத்துவோம்.

இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றத்திற்கு அப்போதய எதிர்கட்சியில் இருந்தாலும் எனது பங்கும் இருந்தது. இவ்வாறான நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் எனக்கு இதுவரை யாரும் தகவல் தரவில்லை.

அவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த முக்கிய விடயங்களில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

கடலட்டை வளர்ப்புப் பண்ணைகளை அமைத்து கொடுத்துள்ளோம். மேலும் பல தொழில்சார் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். ஆனாலும் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் எமது கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை.

அடுத்துவரும் வாரத்தில் அப்பகுதிக்கு செல்ல உள்ளோம். இதன்போது இந்திய இழுவைப்படகு, மற்றும் அவர்களின் தொழில் மற்றும் குடியிருப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் 3 வருடங்களிற்குள் நிறைவு படுத்தப்படும்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான பேருந்த நிலையம், பரந்தன் இரசாயன தொழிற்சாலை, உப்பளம் உள்ளிட்டவை முழுமை பெறாத நிலையில் இன்றும் காணப்படுகின்றது. விரைவில் குறித்த பணிகளை முழுமையாக்குவோம்.

குறித்த வேலைத்திட்டங்களை 3 வருட காலப்பகுதிக்குள் முழுமையாக்கி மக்களிடம் கையளிப்போம். மக்கள் குறைந்தது 5 ஆசனங்களையாவது தருவார்கள் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால் 2 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்தன. நாம் எதிர்பார்த்தது போன்று 5 ஆசனங்களிற்கு மேல் கிடைத்திருந்தால் இந்த விடயங்களை மிக விரைவாக செய்து முடித்திருப்போம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கிணங்க நடைபெற்ற இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,பிரதேச செயலகங்களின் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த கலந்துரையாடலின் போது நிர்வாக கட்டமைப்புடன் தொடர்புடைய விடயங்கள்,சமூக அபிவிருத்தி சமூக நலன் சார்ந்த விடயங்கள், மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி,வாழ்வாதார அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.