முகநூல் மூலம் பண மோசடி செய்த நைஜீரிய பிரஜைகள் கைது

போலியாக உருவாக்கப்பட்ட முகநூல் கணக்கின் ஊடாக நபர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த நைஜீரிய பிரஜைகளை பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

போலி முகநூல் கணக்கில் இருந்து நட்பு அழைப்பை விடுத்து, அதற்கு அமைய தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டு வெளிநாடுகளில் இருந்து பரிசு பொருட்கள் மற்றும் பணத்தை அனுப்புவதாக தகவல்களை அனுப்பி வைக்கும் இந்த நைஜீரிய பிரஜைகள், பரிசு பொருட்கள் மற்றும் பணத்தை பெற்றுக்கொள்வதற்காக தனியார் வங்கி ஒன்றில் தொகை வைப்புச் செய்யுமாறு கூறியுள்ளார்.

இந்த மோசடி வலையில் சிக்கியவர்கள் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை அந்த வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளனர்.

இந்த மோசடியில் சிக்கி ஏமாந்த கெக்கிராவை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை நடத்திய பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவினர் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து பண மோசடியில் சிக்கிய 20 பேர் பொலிஸாரிடம் தகவல்களை வழங்கியுள்ளனர். இதன் பின்னர் தனியார் வங்கியின் உதவியுடன் பொலிஸார், நைஜீரிய பிரஜைகளை கைது செய்துள்ளனர்.