Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சியில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்கள் : பல கிராமங்களும் முடக்கம்

கிளிநொச்சியில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்கள் : பல கிராமங்களும் முடக்கம்

கிளிநொச்சி – கரைச்சி பிரதேசபை முற்றாகவும் பொது சந்தையின் ஒரு பகுதியும் கோவிட் தொற்றினால் முடக்கப்பட்டுள்ளதாகக் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் கோவிட் நிலவரம் தொடர்பாகக் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரினால் மேற்கொள்ளப்பட்ட ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரையும் 389 பேர் கோவிட் தொற்றுக்குள்ளாகி உள்ள நிலையில், அவர்களில் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 34 பேர்களும், பூநகரி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 40 பேர்களும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 84 பேர்களும், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 231பேருக்கும் மொத்தமாக 389 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

தற்பொழுது உள்ள நிலவரத்தின் படி 126 பேர் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் படி நேற்றையதினம் 61 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது இனங்காணப்பட்டுள்ளது.

அதேவேளை நேற்றைய தினம் கரைச்சி பிரதேச சபையில் இருவருக்கு கோவிட் தொற்று உள்ளாகி இருப்பது இனங் காணப்பட்டதை அடுத்து இன்றைய தினம் கரைச்சி பிரதேச சபை முற்றாக முடக்கப்பட்டு அலுவலகத்தைச் சுத்திகரிப்பு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது 1180 பேர் தனிமைப் படுத்தப்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.

நேற்றையதினம் தொற்றுக்கு உள்ளானவர்களில் பலர் கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்டவர்களாகக் காணப்படுகின்ற போதும் அவர்கள் புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடையவராகக் காணப்படுகின்றார்கள்.

அத்துடன் கிளிநொச்சி பொது சந்தையில் வெற்றிலை கடை உரிமையாளர் ஒருவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்றைய தினம் இனங்காணப்பட்டதை அடுத்து பொது சந்தையின் ஒரு பகுதியும் முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்