இலங்கையர் ஒருவருக்காக 15 மில்லியன் ரூபா செலவில் பறந்த வெளிநாட்டு விமானம்!

சவுதி அரேபியாவில் வேலை செய்த நிலையில் சுகயீனம் அடைந்த இலங்கையர் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சிறப்பு விமானம் கட்டுநாயக்க விமான நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளார். இதற்காக சவுதி நிறுவனம் ஒன்று 15 மில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளது.

என்ரூ ரொஹான் என்ற இலங்கையர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுகயீனமடைந்தமையினால் சுயநினைவற்ற நிலையில் சவூதியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்றைய தினம் சவூதி தனியார் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கடவத்தையை சேர்ந்த ரொஹான் சவூதி அரேபியாவின் GulfWest நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர் சுகயீனமடைந்துள்ளார்.

ரொஹானின் மனைவி மற்றும் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய மனிதாபிமான அடிப்படையில் அவருக்கென முன்பதிவு செய்யப்பட்ட தனியார் ஜெட் விமானத்தில் அவர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த இலங்கையருக்காக Gulfwest நிறுவனம் 15 மில்லியன் ரூபாய் செலவளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருக்காக கொழும்பு வைத்தியசாலையில் தாதி மற்றும் வைத்தியர்கள் நியமிக்கப்பட்டு சிகிச்சையளிப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவ்வளவு பெரிய உதவியை செய்த Gulfwest நிறுவனத்தின் உரிமையாளருக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.