கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டமையால் பதிவு மேற்கொள்வதில் தாமதம்!
Share
கிளிநொச்சி…
யுத்தத்தால் கிளிநொச்சி மாவட்டம் பாதிக்கப்பட்டமையால், பிறப்பு சான்றிதழ்களைப் பதிவு செய்வதில், தாமதங்கள் ஏற்படுவதாக, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில், இன்று (11) காலை நடைபெற்ற பிறப்பு சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், வைத்தியசாலையில் பிறப்பு பதிவு செய்யப்படுகின்ற போதிலும், அதன் பிரதியை பதிவாளர் நாயகத்துக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் பலர் அக்கறை கொள்வதில்லை என்றார்.
“வைத்தியசாலையில் வழங்கப்படும் சான்றிதழை பயன்படுத்தி, பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்த்துவிட்டு, தாம் பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொண்டதாக கருதுகின்றனர்.
“உண்மையில், குறித்த சான்றிதழை பிரதேச செயலகங்களில் உள்ள பதிவாளர் நாயகத்தின் அலுவலகங்கள் ஊடாக பதிவு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவ்வாறு செயற்படாமையால் பல குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்” எனவும், அவர் கூறினார்.
கிளிநொச்சி மாவட்டம் யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்பதாலும் இவ்வாறு பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அத்துடன், பதிவுகள் இடம்பெற்றிருந்தாலும் அவை தொலைந்துள்ளமையாலும் பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகதவும் கூறினார்