கிளிநொச்சி மாவட்டத்தில், வனவளத்திணைக்களத்தினராலும் பொதுமக்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான ஒதுக்கீட்டு பிரதேசங்களை, விடுவிக்கப்பட வேண்டுமென, நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த நீர்ப்பாசனத் திணைக்களம், கிளிநொச்சி மாவட்டத்தில், நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான குளங்களின் நீரேந்து பிரதேசங்கள் மற்றும் ஆற்றுப் படுக்கைகள் என்பற பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனவும் இதனால், குளங்களின் அபிவிருத்திகள் மற்றும் பருவ மழைகாலங்களில் அதிகமாக நீரை வெளியேற்றுதல், குளங்களைப் பாதுகாத்தல், பராமரித்தல் என்பன பாரிய பிரச்சினையாக உள்ளன எனவும் கூறியுள்ளது.
பண்டிவெட்டிகுளம், குடமுருட்டிகுளம் ஆகிய நீர்ப்பாசனக் குளங்களின் நீரேந்து பிரதேசங்களை வனவளத்திணைக்களமும் இரத்தினபுரம், திருவையாறு ஆகிய பிரதேசங்களில் உள்ள திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகளை பொதுமக்களும் ஆக்கிரமித்துள்ளனர், எனவும், நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, மேற்படி பிரதேசங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.