கிளிநொச்சி மக்களின் வயிற்றில் அடித்த கரைச்சி பிரதேசசபை : பரிதவிக்கும் மக்கள்

கிளிநொச்சி மக்களின் வயிற்றில் அடித்த கரைச்சி பிரதேசசபை : பரிதவிக்கும் மக்கள்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் குடிநீர் உள்ளிட்ட நீர்த்தேவையினை பூர்த்தி செய்வதற்கு அமைக்கப்பட்ட நீர்த்தாங்கி கரைச்சி பிரதேச சபையினரால் இடித்து அகற்றப்பட்டுள்ளது. தவிசாளர் அரசியல் ரீதியாக எங்களை பழிவாங்கும் நோக்குடன் நடந்துகொள்கின்றார் என செருக்கன் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று (16) பிற்பகல் கரைச்சி பிரதேச சபையின் கனரக வாகனங்கள் மூலம் குறித்த நீர்த்தாங்கி மற்றும் அதனோடு இணைந்த மலசல கூடம் என்பன இடித்து வீழ்த்தப்பட்டுள்ளது. அனுமதி பெறப்படாது அமைக்கப்பட்ட கட்டடம் எனத் தெரிவித்து கரைச்சி பிரதேச சபையினரால் இடிக்கப்பட்டுள்ளது என பிரதேச பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த கிராமம் உவர் பிரதேசம். இங்கு வருடத்திற்கு 365 நாட்களுக்கும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் கரைச்சி பிரதேச சபையினரால் சீராக குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில் கிளிநொச்சி நகரிலிருந்து சுமார் 12 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கிராமத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற உப்பளம் ஒன்றில் எமது கிராமமான செருக்கன் குடியிருப்பை சேர்ந்த மக்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்டவர்கள். அதில் பலர் பெண்த் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எனவே இவர்கள் அனைவரும் இங்கு பணியாற்றுகின்றனர். இவர்களின் குடிநீர் உள்ளிட்ட நீர்த்தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் தனியாரால் அமைக்கப்பட்ட நீர்த் தாங்கி மலசல கூடம் என்பன இன்று (16) கரைச்சி பிரதேச சபையால் இடித்து அகற்றப்பட்டுள்ளது.

நாங்கள் கும்பிட்டு மன்றாடி கேட்டும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. நகரத்தில் எத்தனையோ சட்டவிரோத கட்டடங்கள் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு பல கிலோமீற்றர்கள் தொலைவில் காட்டுக்குள் அமைந்துள்ள நீர்த்தாங்கியை உடைத்து அகற்றுவது என்பது மிகவும் மோசமான செயல். இது மிகவும் வேதனையளிக்கிறது எனத் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் கா.சண்முகதாசனிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, “அந்த நீர்த்தாங்கி அனுமதிப் பெறப்படாது அமைக்கப்பட்டது. மூன்று தடவைகள் கடிதம் மூலம் அறிவித்தும் அவர்கள் உரிய அனுமதி பெறவில்லை. எனவேதான் சட்டரீதியாக உடைத்துள்ளோம்“ என்றார்.