செட்டிக்குளம் பகுதியில் பல மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்டு பத்து வருடங்களாக பற்றைக்காடாக காணப்படும் சிறுவர் பாடசாலை

வவுனியா – செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வீரபுரம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள சிறுவர் பாடசாலை கடந்த பத்து வருடங்களாக பற்றைக்காடுகளாக காட்சியளிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டளவில் சமூக நலன்சார் தனியார் நிறுவனத்தினால் பல மில்லியன் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட இச்சிறுவர் பாடசாலை செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் கீழ் வழங்கப்பட்டது.

ஒன்றரை வருடம் மாத்திரம் குறித்த சிறுவர் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்ற போதிலும் அதன் பின்னர் சிறுவர் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

தற்போது அந்த சிறுவர் பாடசாலை பற்றைக்காடாகக் காட்சியளிப்பதுடன் அந்த பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் சுட்டிக்காட்டினார். இவ்விடயம் தொடர்பில் வீரபுரம் கிராம சேவையாளரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த கட்டடம் பத்து வருடங்களுக்கு முன்னர் தனியார் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டது.

சிறுவர் பாடசாலையின் கற்றல் நடவடிக்கைகள் வேறு ஒரு பகுதிக்கு மாற்றப்பட்டமையினால் கடந்த பல வருடங்களாக இந்த சிறுவர் பாடசாலை பற்றைக்காடாகக் காணப்படுகின்றது. குறித்த சிறுவர் பாடசாலையினை மீள் புனரமைப்பு மேற்கொண்டு சிறுவர் பாடசாலையினை இயக்குவதற்குரிய நடவடிக்கையினை தாம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

பல மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட இவ் கட்டடத்தொகுதி இவ்வாறு காணப்படுவது வேதனையளிக்கும் விடயமே என கூறியுள்ளார்.