கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகள்.. சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் 144 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களாக அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

கிழக்கு மாகாணத்தில் புதிய கொவிட் – 19 தொற்றாளர்கள் 13 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் அக்கரைப்பற்றில் மாத்திரம் 10 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று சந்தையில் எழுமாறாக 20 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போதே இந்த 10 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அக்கரைப்பற்று சுகாதார அலுவலகப் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு தொடர் பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் ஏனைய பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக பொது மக்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். பேலியகொட மீன் சந்தை கொத்தணி போன்று இங்கும் சிறிய கொத்தணி ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதிலிருந்து அனைவரையும் பாதுகாக்க சுகாதார துறையில் அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.