கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள், உட்பட ஒன்பது பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள், உள்ளிட்ட ஒன்பது பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வெளி நோயாளர் பிரிவிற்கு மருந்தெடுப்பதற்குச் சென்ற 72 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகத்தினரால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த ‘இனங்காணும்’ பொறிமுறையினாலேயே இந்த முதியவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்பது கண்டறியப்பட்டு அவர் தனிமைப்படுத்தும் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வைத்தியசாலை நிர்வாகத்தினால் இம் முதியவர் உரிய அவதானத்துடனேயே கையாளப்பட்டிருந்தார் எனவும் அதனால் வைத்தியசாலைப் பணியாளர்கள் எவரும் தொற்றுக்காளாகும் நிலை ஏற்படவில்லை எனவும் ஊடகங்கள் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறெனினும், அவர் தனிமைப்படுத்தல் விடுதியிலிருந்து நள்ளிரவில் சாதாரண மருத்துவ விடுதியில் உள்ள தனிமைப்படுத்தும் இடத்துக்கு மாற்றப்பட்டமை, மறுநாள் (22) இவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற எச்சரிக்கை உரியத் தரப்பினரால் வைத்தியசாலை நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தும் அது குறித்து அலட்டிக்கொள்ளாமல் பிறிதொரு காரணத்தால் விடுதிக்கு அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரைத் தொடர்ந்தும் இம் முதியவருடன் அதே அறையில் தங்கவைத்திருந்தமை, முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அதுகுறித்து வைத்தியசாலைப் பணியாளர்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்காமை ஆகிய விடயங்கள் தொடர்பில் பணியாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியிருந்தது.

மேலும் இது குறித்த செய்தியும் வெளியாகியிருந்தது.

இந்த நிலையிலேயே நோயாளர் விடுதியில் குறித்த முதியவர் தங்கியிருந்த போது அவருக்குச் சிகிச்சையளித்த வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட 09 பணியாளர்கள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் சிலருக்கு சுயதனிமைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை நிர்வாகத்தின் கடுமையான ஆட்சேபனையும் கடந்து கிளிநொச்சி சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் இந்த இறுக்கமான நடவடிக்கையினை எடுத்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் மாவட்ட வைத்தியசாலையின் வழமையான சேவைகள் பாதிக்கப்படாதவகையில் தொடர்ந்தும் மக்களுக்கான சேவைகள் இடம்பெற்று வருகிறது.