கிளிநொச்சியில் 310 பேர் சுய தனிமைப்படுத்தலில் – ரூபவதி கேதீஸ்வரன்

தற்போது 310 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாகவும், ஜெயபுரம் பகுதியில் கொழும்பில் தொழில் புரிந்து வீடு திரும்பிய நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக இன்று (10) ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

குறித்த ஊடக சந்திப்பில்,

கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்புபட்ட குடும்பங்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனை நிறைவடைந்து தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டாலும் தொடர்ந்து 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான உலருணவு பொதிகளை நான்கு பிரதேச செயலகமும் வழங்கி வருகின்றது. இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் 197 குடும்பங்களுக்கான உலருணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று மாதாந்த சிகிச்சைக்காக வைத்தியசாலை வரும் நோயாளர்களுக்கு குறிப்பாக முதியவர்களுக்கு தற்போது தபால் மூலம் வீடுகளுக்கு மருந்துகள் அனுப்பி வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

மாவட்டத்தில் கொரோனா நிலைமை சுகாதார தரப்பினரின் அறிக்கையின் படி ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும் மக்கள் சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.