கிளிநொச்சியில் வடக்கிற்கான தொற்றுநோய் விசேட வைத்தியசாலை நாளை திறப்பு

வடக்கிற்கான தொற்றுநோய் விசேட வைத்தியசாலையானது கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் நாளைய தினம் திறந்து வைக்கப்பட உள்ளது.

மேலும், இவ்வைத்தியசாலையில் தற்போது 200 நோயாளர்கள் ஒரே தடவையில் தங்கி சிகிச்சை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் எதிர்காலத்தில் மேலும் விரிவாக்கப்பட்டு அதிவிசேட தொற்று நோயியல் ஆய்வுகூடங்கள் மற்றும் சிறப்பு வசதிகளுடன் கொழும்பு தேசிய தொற்று நோய் சிறப்பு மருத்துவமனைக்கு ஈடாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் தொற்றுநோய்களுக்கான விசேட சிகிச்சைக்கென இதுவரை காலமும் கொழும்பு செல்ல வேண்டியிருந்த வடபகுதி மக்கள் எதிர் காலத்தில் குறித்த வைத்தியசாலையிலேயே பலனடைய முடியும்.

அதாவது கொரோனாவுக்கு பின்னரும் குறித்த வைத்தியசாலை வடக்கிற்கான தொற்று நோயியல் விசேட வைத்தியசாலையாக இயங்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் கொரொனா தொற்றுப்பரவல் ஏற்பட்டுள்ள இத்தருணத்தில் மத்திய சுகாதார அமைச்சின் ஊடாக உலக வங்கியிடம் வேலைத்திட்டத்திற்கான முன்மொழிவினை சமர்ப்பித்து அனுமதி பெறப்பட்டது.

மிகக் குறுகிய காலத்தில் வைத்தியசாலையின் முதலாம் கட்டப் பணிகளைப் பூர்த்தி செய்து திறந்து வைப்பதில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவன் அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தமை பலராலும் பாராட்டப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.