கிளிநொச்சியில் வடிகால் வெட்டிய மண்ணை வெளியாட்களுக்கு விற்பனை செய்தமை தொடர்பில் விசனம்

கிளிநொச்சி – பரந்தன், சிவபுரம் கிராமத்தில் வடிகால் வெட்டிய மண்ணை வெளியாட்களுக்கு விற்பனை செய்தமை தொடர்பில் பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபைக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தின் எட்டாம் குறுக்கு வீதிக்கான வடிகால் அமைக்கும் பணி கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது வெட்டப்பட்ட பெருந்தொகையான மண்ணினை குறித்த வீதிக்கோ அல்லது நீர் தடுப்பு அணை அமைப்பதற்கோ பயன்படுத்தாது குறித்த பகுதியில் வெட்டப்பட்ட மண் யாவும் வெளியாட்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் மேற்பார்வையில் குறித்த வேலை முன்னெடுக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கரைச்சி பிரதேசசபையின் செயலாளரை தொடர்புகொண்டு கேட்டபோது, குறித்த பிரதேசத்தில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும், அது பிரதேச சபை உப அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியாகும்.

எனவே இது தொடர்பில் தொழிநுட்ப உத்தியோகத்தர்களிடம் அறிக்கையினை கோரி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்