வழக்குகளிலிருந்து தப்ப கடல்வழியாக இந்தியா சென்ற கிளிநொச்சி இளைஞன் சிக்கினார்

கிளிநொச்சியில் பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், கடல் வழியாக தப்பிச்சென்ற இளைஞன் தமிழக கியூ பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கடல் வழியாக இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தமிழகம் வந்ததாக தமிழக கியூ பிரிவு பொலிசாருக்கு தகவல் கிடைத்து. இந்த தகவலின் பேரில் கியூ பிரிவு பொலிசார் தீவிரமாக அவரை தேடி வந்தனர்.



இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் அந்த இளைஞர் தங்கி இருப்பதாக ஈரோடு கியூ பிரிவு பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு கியூ பிரிவு பொலிசார் காங்கேயம் பகுதியில் அந்த நபரை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். அப்போது அந்த நபர் காங்கேயத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு நூல் மில்லில் தங்கியிருந்தது தெரியவந்தது. உடனே அங்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் கிளிநொச்சி உதய நகரை சேர்ந்த வடிவேல் தசிகுமார் (36) என்பதும், கடந்த 17ஆம் திகதி இலங்கையில் இருந்து ரூ.2½ இலட்சம் ரூபா பணம் கொடுத்து கடல்வழியாக ராமேஸ்வரம் வந்ததும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில், தசிகுமார் காங்கேயத்தில் உள்ள தனியார் நூல் மில்லில் பெயிண்ட் அடிக்கும் வேலையில் ஈடுபட்டு வரும் நண்பருடன் தங்கி இருந்ததையும், அவர் மீது இலங்கையில் பல்வேறு வழக்குகள் இருப்பதையும் பொலிசார் கண்டுபிடித்தனர். அதுமட்டுமின்றி பாஸ்போர்ட், விசா போன்ற உரிய ஆவணங்களும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து தசிகுமாரை பொலிசார் நேற்று முன்தினம் கைது செய்ததுடன், அவரிடம் இருந்த இலங்கை தேசிய அடையாள அட்டையையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட தசிகுமாரை காங்கேயம் மாவட்ட நீதிமன்றத்தில் பொலிசார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.