இலங்கையில் முதல் முதலாக கிளிநொச்சியில் இலத்திரனியல் குடும்ப அட்டை அறிமுகம்

இலங்கையில் முதல் முதலாக கிளிநொச்சியில் இலத்திரனியல் குடும்ப அட்டை அறிமுகம்

இலங்கையில் முதல் முதலாக இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலகத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் இடம்பெற்றது.

கண்டாவளை பிரதேச செயலாளரின் முயற்சியில் அப்பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில், குறித்த இலத்திரனியல் குடும்ப அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக ஓர் குடும்பத்தின் சகல விபரங்களையும் இலத்திரனியல் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொதுமகன் ஒருவர், பிரதேச செயலகத்தின் கீழ் ஓர் விடயத்தினை பெற்றக்கொள்வதற்கு அல்லது சேவையை பெற்றுக்கொள்வதற்கு இலகுபடுத்தலாக குறித்த இலத்திரனியல் குடும்ப அட்டை பயன்தரவுள்ளதாக கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தனது தலைமையுரையில் தெரிவித்தார்.

சேவை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக வருகைதரும் பிரஜை, குறித்த இலத்திரனியல் அட்டையை சமர்ப்பிக்கும்போது இலகுவாக சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார். அதில் வாழ்வாதாரம், வீடு, குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட தேவையுடையவர்களை இலகுவாக அடையாளம் காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதனடிப்படையில் இன்று முதல் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்கள் தமது குடும்ப விபரங்களை இலத்திரனியல் இலகுபடுத்தலின் ஊடாக சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

அதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த இலத்திரனியல் குடும்ப அட்டையை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களிற்கு குறித்த இலத்திரனியல் அட்டை வழங்கி வைக்கப்பட்டது.