முல்லைத்தீவு – துணுக்காய், உயிலங்குளத்தில் இருந்து அக்கராயன் வரை பஸ் சேவையை நடத்தவும்

முல்லைத்தீவு – துணுக்காய், உயிலங்குளத்தில் இருந்து அக்கராயன் வரை பஸ் சேவையை நடத்தவும்

முல்லைத்தீவு – துணுக்காய், உயிலங்குளத்தில் இருந்து அக்கராயன் வரையான வீதி தற்காலிகமாக புனரமைக்கப்பட்டிருப்பதன் காரணமாக, பஸ் சேவையை நடத்துமாறு, பல கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2010ஆம் ஆண்டிலிருந்து குறித்த வீதியில் பஸ் சேவைகள் நடைபெறுவதில்லை. துணுக்காய் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பஸ் சேவைகள் நடத்துங்கள் என பாதிக்கப்பட்ட கிராமங்களின் பிரதிநிதிகளால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், வீதி புனரமைக்கப்படாததன் காரணமாக, பஸ் சேவைகள் நடத்த முடியாது உள்ளதாக முக்கிய காரணமாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது உயிலங்குளத்தில் இருந்து அக்கராயன் வரை வீதி தற்காலிகமாக புனரமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஆலங்குளம், உயிலங்குளம், தென்னியங்குளம், கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், அமதிபுரம், ஆரோக்கியபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்களின் போக்குவரத்தைக் கருத்திற்கொண்டு, பஸ் சேவைகளை நடத்துவதற்கு மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2009ஆம் ஆண்டில் நலன்புரி முகாம்களில் இருந்து துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது தனியார், இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் பணியில் ஈடுபட்டன. அப்பணிகள் வீதியின் நிலைமையைக் காரணங்காட்டி பின்னர் இடைநிறுத்தப்பட்டன.