மாணவன் மீது கொடூர தாக்குதல் – கொழும்பை சேர்ந்த அதிபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை

மாணவர் ஒருவரை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டிற்காக பாடசாலை அதிபர் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இன்று இதனை தெரிவித்துள்ளது.

2013ம் ஆண்டில் 12 வயது சிறுவனை கொடூரமாக தாக்கியமை தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டு கொழும்பை சேர்ந்த 52 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த பாடசாலை அதிபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்டவருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.