காயமடைந்த நிலையில் கரையொதுங்கிய அரியவகை ஆமை!

வில்பத்து தேசிய பூங்காவை அண்மித்த கடற்கரையோரத்தில் காயமடைந்த நிலையில் Green Sea Turtle (Chelonia Mydas) எனும் வகை இனத்தைச் சேர்ந்த ஆமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

நேற்று முந்தினம் கரையொதுங்கிய ஆமையின் கீழ் தாடையில் பலத்த காயங்கள் காணப்பட்டதாகவும், அதனையடுத்து முள்ளிக்குளம் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் இரண்டு மணித்தியாலயங்களுக்கும் மேலாக சிகிச்சை அளித்துள்ள போதிலும் அந்த ஆமை இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கல் ஆமை, இறைச்சி ஆமை மற்றும் மணல் ஆமை என பல பெயர்களில் அழைக்கப்படும் Green Sea Turtle (Chelonia Mydas) இனத்தைச் சேர்ந்த குறித்த ஆமை இலங்கையைச் சுற்றியுள்ள கடல்களில் வசிக்கும் ஐந்து பொதுவான ஆமைகளில் ஒன்றாகும் என சொல்லப்படுகிறது.

இந்த ஆமை மேலே இருந்து பார்க்கும்போது இதய வடிவத்தை ஒத்திருக்கிறது. இந்த இனத்தில் மற்ற ஆமைகளைப் போல வளைந்த கொக்கு இல்லை மற்றும் பெண் ஆமையை விட ஆண் ஆமை சற்று சிறியது எனவும், இந்த வகை ஆமை ஆண்டு முழுவதும் முட்டையிடுகிறது எனவும் கூறப்படுகிறது.

பொதுவாக ஒரு கூட்டில் சுமார் 100 முதல் 175 முட்டைகள் வரை இடும். இந்த ஆமைகள் வெப்பமண்டல கடல்களிலும், மணல் தீவுகளிலும் அதிகம் காணப்படுகின்றன. விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் மிகவும் பாதுகாக்கப்பட்ட ஊர்வன இனமாக இந்த ஆமை இனம் பாதுகாக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.